கராச்சி: 'டி-20' உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு, ஒற்றுமை இல்லாததே காரணம். வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டுள்ளனர்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த 'முன்னாள் சாம்பியன்' பாகிஸ்தான் அணி தடுமாறியது. அறிமுக அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 'சூப்பர் ஓவரில்' அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா-அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் ரத்தாக, பாகிஸ்தானின் 'சூப்பர்-8' கனவு தகர்ந்தது. லீக் சுற்றுடன் வெளியேறியது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) நிர்வாகி ஒருவர் கூறியது:பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. கேப்டன் பதவியை பறித்ததால், ஷாகீன் ஷா அப்ரிதி அதிருப்தியில் இருந்தார். இவருக்கு கேப்டன் பாபர் ஆசம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கேப்டன் பதவிக்கு தன்னை பரிசீலிக்காததால் முகமது ரிஸ்வானும் கோபத்தில் இருந்தார். பாபர் தலைமையில் ஒரு குழு, ஷாகீன் அப்ரிதியின் கீழ் மற்றொரு குழு, ரிஸ்வான் கட்டுப்பாட்டில் ஒரு குழு என மூன்று குழுக்களாக வீரர்கள் பிரிந்து செயல்பட்டனர்.
பாபருக்கு சவால்
ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசிக் கொள்வதில்லை. ஒவ்வொரு குழுவின் தலைவரையும் சமதானம் செய்யும் பணியில் சில வீரர்கள் ஈடுபட்டனர். முகமது ஆமிர், இமாத் வாசிம் போன்ற 'சீனியர்' வீரர்களின் வரவு குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தியது. சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க இயலாது. அணியை ஒருங்கிணைப்பதே பாபருக்கு பெரும் சவாலாக உள்ளது.
பலன் இல்லை
உலக கோப்பை தொடருக்கு முன்பே பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் பிளவு இருப்பது பி.சி.பி., தலைவர் மொசின் நக்விக்கு தெரியும். இரு முறை வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு. உலக கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இவரது ஆலோசனைக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் சொதப்பல் ஆட்டத்துக்கு கேப்டன் பாபரை மட்டும் குறை சொல்ல முடியாது. இக்கட்டான கட்டத்தில் முன்னணி வீரர்கள் கைகொடுக்கவில்லை. உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவரில் 15 ரன்னை ஹாரிஸ் ராப் கட்டுப்படுத்த தவறினார். 'புல் டாஸ்' பந்துகளை வீசி பவுண்டரி, சிக்சர் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். உடற்தகுதி இல்லாத வீரர்களும் வெற்றிக்கு உதவவில்லை.
'தல' தப்புமா
உலக கோப்பை தோல்விக்கு கேப்டன் தான் 'பலிகடா' ஆக்கப்படுவார். இம்முறை பாபர் பதவி உடனடியாக பறிக்கப்படுவது சந்தேகம். ஒட்டுமொத்த அணியையும் மாற்றி அமைக்க வேண்டும். பி.சி.பி., தலைவர் மொசின் கானுக்கும் எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியிலும் நிர்வாகித்திலும் பெரிய மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
சம்பளம் குறையுமா
உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தை பி.சி.பி., மறுபரிசீலனை செய்ய உள்ளது. செயல்படாத வீரர்களின் சம்பளம் குறைக்கப்படலாம். இனி இரண்டு வெளிநாட்டு 'டி-20' தொடரில் மட்டும் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.