கோப்பை வென்றது ஆஸி., * மீண்டும் வீழ்ந்தது நியூசி.,
மவுன்ட் மவுன்கனுய்: மூன்றாவது 'டி-20' போட்டியில் 3 விக்கெட்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 தொடரை வென்று, 'சாப்பல்-ஹாட்லீ' கோப்பையை கைப்பற்றியது.நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. நேற்று மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நியூசிலாந்து அணிக்கு ராபின்சன் (13), சாப்மென் (4), மிட்செல் (9) ஏமாற்றினர். 35 பந்தில் 48 ரன் எடுத்த செய்பெர்ட், பார்ட்லெட் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் பிரேஸ்வெல் (36), ஜேம்ஸ் நீஷம் (25) சற்று உதவினர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 156/9 ரன் எடுத்தது.மார்ஷ் சதம்ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் (8) ஜோடி துவக்கம் தந்தது. மாத்யூ ஷார்ட் (7), டிம் டேவிட் (3), கேரி (1), ஸ்டாய்னிஸ் (2) என வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். மனம் தளராமல் போராடிய மார்ஷ், 50 பந்தில் சதம் கடக்க, வெற்றி எளிதானது. சர்வதேச 'டி-20'ல் இவரது முதல் சதம் இது.ஆஸ்திரேலிய அணி 18 ஓவரில் 160/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. மார்ஷ் (103), அபாட் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.