கிரிக்கெட் டூ பேஸ்பால் * மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுப்பு
புதுடில்லி: ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வீரர்களை, பேஸ்பால் நட்சத்திரங்களாக மாற்றப்படுவர் என்ற செய்தியை மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுத்துள்ளது.இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக் நடத்த முயற்சி நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் 'மிஷன் ஒலிம்பிக் செல்' (எம்.ஒ.சி.,) கூட்டம் நடந்தது. இதில், '1992 முதல் ஒலிம்பிக், 1994 முதல் ஆசிய விளையாட்டில் இடம் பெறும், கிரிக்கெட் போல விளையாடப்படும் பேஸ்பால் போட்டியில், முதன் முறையாக இந்தியா பங்கேற்பது, இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) ஆலோசித்து, கிரிக்கெட் வீரர்களை பேஸ்பால் விளையாட்டு நட்சத்திரங்களாக மாற்ற முயற்சிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது,' என செய்தி வெளியானது.இதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில்,' இது முற்றிலும் கற்பனை ஆனது, அடிப்படையற்றது. இந்தியாவில் பேஸ்பால் போட்டிக்கு மத்திய அமைச்சகம் இன்னும் அனுமதி கூட தரவில்லை. இதுகுறித்து எந்த நிலையிலும் விவாதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் எப்படி நடத்துவது என்று தான் திட்டமிடுகிறோம். மற்ற விஷங்கள் குறித்து யோசிக்க நேரமில்லை,' என தெரிவித்துள்ளது. இது சாத்தியமாவரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. ஆனால், தற்போது வெளியான செய்தி குறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறுகையில்,''இந்தியாவில் மாநில பிரிமியர் லீக், ஐ.பி.எல்., என பல தொடர் உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற டென்னிஸ் பந்தில் விளையாடப்படும் தொடர் கூட, ஆண்டுக்கு ரூ. 40 முதல் 50 லட்சம் வருமானம் தருகின்றன. சூழல் இப்படி இருக்க, கிரிக்கெட்டில் இருந்து யாரும் பேஸ்பால் செல்ல மாட்டர்,'' என்றார்.