தமிழக அணி முன்னிலை
ஷிமோகா: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (3 நாள், 16 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் நடத்தப்படுகிறது.ஷிமோகாவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 269 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் உ.பி., அணி முதல் இன்னிங்சில் 13/1 ரன் எடுத்திருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஹிதேஷ் குமார் 80 ரன் எடுத்து அவுட்டானார். ஆருஷ் குப்தா (53), அஷ்வத் (32) சற்று கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற உ.பி., அணி 208 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இணைந்த பிரித்வி ராஜ், கிருஷ்ணா ஜோடி, முன்னிலை பெற போராடியது. 10 வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது, செல்லதுரை பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்தார் பிரித்வி ராஜ் (27). உ.பி., அணி முதல் இன்னிங்சில் 260 ரன்னில் ஆல் அவுட்டானது. கிருஷ்ணா (26) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகத்தின் செல்லதுரை 6 விக்கெட் சாய்த்தார். முதல் இன்னிங்சில் பெற்ற 9 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது தமிழக அணி. 2வது நாள் முடிவில் 43/1 ரன் எடுத்து, 52 ரன் முன்னிலை பெற்றது.