| ADDED : பிப் 23, 2024 10:55 PM
இந்தியா சார்பில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான 313வது வீரரானார் ஆகாஷ் தீப், 27. வேகப்பந்துவீச்சாளரான இவருக்கு, இந்திய அணியின் தொப்பியை பயிற்சியாளர் டிராவிட் வழங்கினார். பீஹாரின் ரோதாசில் பிறந்த ஆகாஷ், சோதனைகளை கடந்து சாதித்துள்ளார். இவரது தந்தை ராம்ஜி சிங், உடற்கல்வி ஆசிரியராக இருந்தார். ஓய்வுக்கு பின் பக்கவாதம் ஏற்பட, 2015ல் காலமானார். இதே ஆண்டில் இவரது அண்ணன் தீரஜிற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். இதனால் குடும்ப பாரம் ஆகாஷ் மீது விழுந்தது. மேற்குவங்கத்திற்கு குடிபெயர்ந்தார். கடினமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். பெங்கால் அணிக்காக அசத்தினார். ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட, வாழ்க்கையில் வசந்தம் வீசத் துவங்கியது.இந்திய அணியில் அறிமுகமாகப் போகும் விஷயத்தை அலைபேசி மூலம் தாயார் லடுமா தேவிக்கு சொன்னார். பீஹாரில் இருந்து ராஞ்சிக்கு 300 கி.மீ., சாலை வழி பயணம் மேற்கொண்டு மைதானத்திற்கு வந்தார். போட்டிக்கு முன் மகனை ஆசிர்வாதம் செய்தார். பின் லடுமா தேவி கூறுகையில்,''ஆகாஷ் தீப் அரசு அதிகாரியாக வேண்டுமென அவரது தந்தை ஆசைப்பட்டார். ஆனால், கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆகாஷ் விரும்பினார். தற்போது கனவு நனவாகியுள்ளது. அவரது தந்தை, அண்ணன் இருந்திருந்தால் அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பர்,''என்றார்.ஆகாஷ் தீப் கூறுகையில்,''ஒரே ஆண்டில் எனது தந்தை, அண்ணனை இழந்த போது, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. கிரிக்கெட்டில் தடம் பதிக்க முடிவு செய்தேன். நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே தந்தையின் கனவாக இருந்தது. அவர் வாழும் போது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. அறிமுக போட்டியில் மூன்று விக்கெட் வீழ்த்தினேன். இதனை எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.