உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டிராவிட், ரோகித் தப்புக்கணக்கு: தொடரும் உலக பைனல் ஆடுகள சர்ச்சை

டிராவிட், ரோகித் தப்புக்கணக்கு: தொடரும் உலக பைனல் ஆடுகள சர்ச்சை

ஆமதாபாத்: ''உலக கோப்பை பைனலுக்கான ஆடுகளத்தை டிராவிட், ரோகித் சர்மா 3 நாள் பார்வையிட்டனர். இதன் பின் ஆடுகளத்தின் தன்மை மாற்றப்பட்டது,'' என முகமது கைப் புகார் கூறினார்.இந்தியாவில் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர்(50 ஓவர்) நடந்தது. இந்திய அணி வரிசையாக 10 வெற்றிகளுடன் பைனலில் களமிறங்கியது. ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த பைனலில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பவுலிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 240 ரன் மட்டும் எடுத்தது. பின் டிராவிஸ் ஹெட் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 241/4 ரன் எடுத்து வென்றது. ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இத்தொடரின் ஆடுகளங்கள் குறித்து ஐ.சி.சி., ஆடுகள பராமரிப்பாளர் ஆண்டி அட்கின்சன் அதிருப்தி தெரிவித்தார். பி.சி.சி.ஐ., உடன் மோதல் காரணமாக பைனலுக்கு முன் வெளியேறினார். பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு மந்தமான ஆடுகளமே காரணம் என ஹர்பஜன் உள்ளிட்டோர் விமர்சித்தனர். தற்போது ஆடுகளம் அமைக்கப்பட்டதில் இந்தியாவின் தலையீடு இருந்தது தெரிய வந்துள்ளது.இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியது:பைனல் நடப்பதற்கு முன் ஆமதாபாத் ஆடுகளத்தை இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து 3 நாள் கண்காணித்தனர். மாலை நேரத்தில் வருவர். ஒரு மணி நேரம் ஆடுகளத்தை சுற்றி வருவர். இதற்கு பின் தான் ஆடுகளத்தின் நிறம் மாறியது. போதிய அளவில் தண்ணீர் தெளிக்கப்படவில்லை. புற்கள் காணப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற 'வேகங்கள்' இருப்பதால், மந்தமான ஆடுகளத்தை அமைக்கும்படி அறிவுறுத்தி தவறு செய்தனர். பொதுவாக ஆடுகள பராமரிப்பாளரை யாரும் கட்டுப்படுத்த முடியாது; தனது பணியை சுதந்திரமாக செய்வார் என்றெல்லாம் கூறுவர். இதை ஏற்க முடியாது. ஆடுகளத்தை சுற்றி வந்து கண்காணிக்கும் சமயத்தில் 'அதிக தண்ணீர் தெளிக்க வேண்டாம். புற்களை குறைத்து விடுங்கள்,' என இரு வரிகளை போகிற போக்கில் சொன்னால் போதும். இதில் தவறு ஒன்றும் இல்லை. உள்ளூர் அணிகள் தங்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றிக் கொள்வது சகஜம். ஆனால், இந்திய அணியின் கணக்கு இம்முறை தவறாகிப் போனது.

கம்மின்ஸ் முடிவு

பொதுவாக பைனலில் 'டாஸ்' வெல்லும் அணி 'பவுலிங்' தேர்வு செய்வது கிடையாது. ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மாற்றி யோசித்தார். ஏனெனில் சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில், டாஸ் வென்ற இவர், பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா 199 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனை 'சேஸ்' செய்த இந்தியா(41.2 ஓவரில் 201/4 ரன்) எளிதாக வென்றது. இதிலிருந்து பாடம் படித்த கம்மின்ஸ், பைனலில் சாமர்த்தியமாக பவுலிங் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. ஆடுகளத்தின் தன்மையை மாற்றியது நமக்கு பாதகமாக அமைந்தது. இவ்வாறு முகமது கைப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி