தொடரை வென்றது இங்கிலாந்து: நியூசிலாந்து மீண்டும் தோல்வி
வெலிங்டன்: இரண்டாவது டெஸ்டில் 323 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி மீண்டும் ஏமாற்றியது.நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280, நியூசிலாந்து 125 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 378/5 ரன் எடுத்திருந்தது.ரூட் அபாரம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் (106), டெஸ்ட் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 427 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஸ்டோக்ஸ் (49) அவுட்டாகாமல் இருந்தார்.பிளன்டெல் சதம்: பின், 583 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கான்வே (0), வில்லியம்சன் (4), ரச்சின் ரவிந்திரா (6) உள்ளிட்டோர் ஏமாற்றினர். டாம் பிளன்டெல் (115), நாதன் ஸ்மித் (42), டேரில் மிட்செல் (32) ஓரளவு கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 259 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் ஹாரி புரூக் வென்றார்.
36 சதம்
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை இந்தியாவின் ராகுல் டிராவிட் உடன் பகிர்ந்து கொண்டார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இருவரும் தலா 36 சதம் விளாசினர். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41), இலங்கையின் சங்ககரா (38) உள்ளனர். * டெஸ்ட் அரங்கில் 100வது முறையாக ஒரு இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீரரானார் ஜோ ரூட். இம்மைல்கல்லை எட்டிய 4வது வீரரானார் ரூட். ஏற்கனவே சச்சின் (119 முறை), காலிஸ் (103), பாண்டிங் (103) இந்த இலக்கை அடைந்தனர்.