உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்தியா: ரோகித் சர்மா 76 ரன் விளாசல்

சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்தியா: ரோகித் சர்மா 76 ரன் விளாசல்

துபாய்: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது. பரபரப்பான பைனலில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 76 ரன் விளாசினார். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் உள்ளிட்ட இந்திய 'ஸ்பின்னர்'களிடம் சிக்கிய நியூசிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது.பாகிஸ்தானில் 9வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன. ஹென்றி இல்லை: பைனலில், உலகின் 'நம்பர்-1' அணியான இந்தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நல்ல துவக்கம்: நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா வலுவான துவக்க தந்தனர். ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ரச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன. ஷமி ஓவரிலும் ரச்சின் 2 பவுண்டரி அடித்தார். நியூசிலாந்து 7 ஓவரில் 51/0 ரன் எடுத்தது. வருண் திருப்பம்: போட்டியின் 8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி திருப்பம் ஏற்படுத்தினார். இவரது சுழலில் வில் யங் (15) அவுட்டானார். இதற்கு பின் இந்திய 'ஸ்பின்னர்'கள் பிடியை இறுக்கினர். குல்தீப் பந்தில் 'ஆபத்தான' ரச்சின் (37) போல்டானார். அனுபவ வில்லியம்சன் குல்தீப் பந்தை அவசரப்பட்டு அடித்து அவரிடமே 'கேட்ச்' கொடுத்து வெளியேற, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். நியூசிலாந்து 12.2 ஓவரில் 75/3 ரன் எடுத்து தவித்தது. நமது நான்கு 'ஸ்பின்னர்'கள் தொடர்ந்து துல்லியமாக பந்துவீச, அடுத்த 81 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. பிரேஸ்வெல் விளாசல்: லதாம் (14) நிலைக்கவில்லை. மீண்டும் பந்துவீச வந்த வருண், இம்முறை பிலிப்சை (34) போல்டாக்கினார். போராடிய மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார். ஷமி பந்தில் இமாலய சிக்சர் (89 மீ., துாரம்) விளாசினார். மிட்சல் 63 ரன்னில் (101 பந்து, 3x4) அவுட்டானார். பிரேஸ்வெல், 39 பந்தில் அரைசதம் எட்டினார். கடைசி 10 ஓவரில் 79 ரன் எடுக்கப்பட்டன. நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. பிரேஸ்வெல் (53, 3x4, 2x6) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் வருண், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 'சூறாவளி' துவக்கம் தந்தார். அதிரடி 'மூடில்' இருந்த இவர், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். மறுபக்கம் சுப்மன் அடக்கி வாசித்தார். நாதன் ஸ்மித் ஓவரில் 'ஹிட்மேன்' ரோகித் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 14 ரன் கிடைத்தன. கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய இவர், 41 பந்தில் அரைசதம் எட்டினார். 17 ஓவரில் இந்தியா 100/0 ரன்னை தொட்டது. முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த நிலையில், சான்ட்னர் பந்தில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்த 'கேட்ச்சில்' சுப்மன் (31) வெளியேறினார். கோலி ஏமாற்றம்: அடுத்து வந்த கோலி (1), பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபிள்யு., ஆக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் ரோகித் (76, 7x4, 3x6) அவுட்டாக, பதட்டம் ஏற்பட்டது. இந்தியா 27 ஓவரில் 122/3 ரன் எடுத்திருந்தது.ராகுல் உறுதி: பின் ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பாக ஆடினர். பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து 'லாங்-ஆன்' திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராக வந்தது. ஆனால், அவர் 'கேட்ச்சை' நழுவவிட்டு, இந்தியாவுக்கு உதவினார். நியூசிலாந்தின் கோப்பை கனவை தகர்த்தார். சான்ட்னர் பந்தில் ரச்சினின் சூப்பர் 'கேட்ச்சில்' ஸ்ரேயாஸ் (48) அவுட்டானார். அக்ர் படேல் (29), ஹர்திக் பாண்ட்யா (18) கைகொடுத்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. ராகுல் (34), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.'டாஸ்'...'மிஸ்'ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக இந்தியா 'டாஸ்' வெல்ல தவறியது. * ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டாஸ்' வெல்லாத கேப்டன் பட்டியலில் முதலிடத்தை (தலா 12 முறை) ரோகித் (2023 நவ.- 2025, மார்ச்), லாரா (வெ.இ., 1998 அக்.-1999 மே)) பகிர்ந்து கொண்டனர். நழுவிய கைகள்நேற்று இந்திய வீரர்கள் நான்கு 'கேட்ச்சை' நழுவவிட்டனர்.ஷமி வீசிய பந்தை (6.3வது ஓவர்) நேராக அடித்தார் ரச்சின். இது ஷமியின் விரலில் பட்டு 'கேட்ச்' நழுவியது. வலியால் அவதிப்பட்ட ஷமிக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். அப்போது ரச்சின் 28 ரன் எடுத்திருந்தார். * வருண் சக்ரவர்த்தி பந்தை (7.1வது ஓவர்) ரச்சின் துாக்கி அடிக்க, எல்லையில் இருந்து ஓடி வந்த ஸ்ரேயாஸ் 'கேட்ச்சை' கோட்டைவிட்டார். அப்போது 29 ரன் எடுத்திருந்தார். ஒருவழியாக 37 ரன்னுக்கு ரச்சின் அவுட்டாக, பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.* அக்சர் பந்தில் (34.5) டேரில் மிட்சல் கொடுத்த 'கேட்ச்சை' நழுவவிட்டார் ரோகித். அப்போது மிட்சல் 38 ரன் எடுத்திருந்தார். * ஜடேஜா பந்தில் (35.6) பிலிப்ஸ் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் கோட்டைவிட்டார் சுப்மன் கில். அப்போது பிலிப்ஸ் 27 ரன் எடுத்திருந்தார்.துவக்க ஜோடிஐ.சி.சி., ஒருநாள் தொடரின் 'நாக்-அவுட்' போட்டியில் (உலக கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி) இரு அணிகளின் துவக்க ஜோடியும் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது 2வது முறையாக அரங்கேறியது. நேற்று நியூசிலாந்தின் யங்-ரச்சின் 57 ரன் சேர்த்தனர். இந்தியாவின் ரோகித்-சுப்மன் 105 ரன் சேர்த்தனர். இதற்கு முன் இந்தியா-பாக்., மோதிய உலக கோப்பை காலிறுதியில் (1996, மார்ச் 9, பெங்களூரு) துவக்க ஜோடிகள் (சச்சின்-சித்து 90, அன்வர்-சோகைல் 84 ரன்) அசத்தினர். ஷமி அதிகம்சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய பவுலர் ஆனார் ஷமி(9 ஓவர், 1/74). முதலிடத்தில் உமேஷ் யாதவ்(2/75, எதிர், தென் ஆப்ரிக்கா, கார்டிப், 2013) உள்ளார். 'சுழல்' ஆதிக்கம்இந்திய 'ஸ்பின்னர்'கள் நேற்று 37.3 சதவீத பந்துகளை 'ஸ்டம்ப்சை' தாக்கும் வகையில் துல்லியமாக வீசினர். 38 ஓவரில் 144 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினர்.* ஒருநாள் அரங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர் வீசியதில், நேற்றைய போட்டி (38 ஓவர்) மூன்றாவது இடம் பெற்றது. முதல் இரு இடங்களில் 41.2 ஓவர் (எதிர், வெ.இ., இந்துார், 2011), 30 ஓவர் (எதிர்,கென்யா, குவாலியர், 1998) உள்ளன. * சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக ஓவர் 'ஸ்பின்னர்'கள் வீசிய அணிகளின் பட்டியலில் இந்தியா (38 ஓவர்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (39.4 ஓவர், எதிர், ஆஸி., கொழும்பு, 2002, அரையிறுதி) உள்ளது. வில்லியம்சன் காயம்நியூசிலாந்து வீரர் வில்லியம்சனின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. 'பீல்டிங்' செய்ய வரவில்லை. மாற்று வீரராக மார்க் சாப்மேன் களமிறங்கினார்.344 'சிக்சர்'நாதன் ஸ்மித் பந்தில் (5.3வது ஓவர்) ஒரு இமாலய சிக்சர் (92 மீ., துாரம்) அடித்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (344 சிக்சர், 273 போட்டி) உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார். * நேற்று 3வது ரன்னை எடுத்த போது நியூசிலாந்துக்கு எதிராக 1000 ரன் (31 போட்டி) எட்டினார் ரோகித். * ஒருநாள் அரங்கில் கேப்டனாக 2,500 ரன் கடந்தார் ரோகித்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை