நியூயார்க்: உலக கோப்பை தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று, நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பும்ரா அசத்தல்
அயர்லாந்து அணிக்கு அர்ஷ்தீப் சிங் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் பால் ஸ்டிர்லிங் (2), ஆன்டி பால்பிர்னி (5) வெளியேறினர். ஹர்திக் பாண்ட்யா பந்தில் லார்கன் டக்கர் (10), கர்டிஸ் கேம்பர் (12), மார்க் அடைர் (3) அவுட்டாகினர். ஹாரி டெக்டர் (4), ஜார்ஜ் டாக்ரெல் (3), மெக்கார்த்தி (0) சோபிக்கவில்லை. ஜோஷ் லிட்டில் (14), கரேத் டெலானி (26) ஆறுதல் தந்தனர்.அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பென் ஒயிட் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பாண்ட்யா 3, அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ரோகித் அபாரம்
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு விராத் கோலி (1) ஏமாற்றினார். ஜோஷ் லிட்டில் வீசிய 9வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரோகித், மார்க் அடைர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் எட்டினார். இவர் 52 ரன்னில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். லிட்டில் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரிஷாப் பன்ட், ஒயிட் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். சூர்யகுமார் (2) சோபிக்கவில்லை. மெக்கார்த்தி பந்தில் சிக்சர் விளாசிய பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பன்ட் (36) அவுட்டாகாமல் இருந்தார்.
ரோகித் காயம்
அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் (8.2வது ஓவர்) வீசிய பந்து தாக்கியதில் கையில் காயமடைந்த இந்தியாவின் ரோகித் சர்மா 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் திரும்பினார். நேற்று ஆடுகளத்தில் பந்துகள் அதிகம் 'பவுன்சர்' ஆகின. லிட்டில் (10.1வது ஓவர்) வீசிய பந்து ரிஷாப் பன்ட் கையையும் பதம் பார்த்தது. 'பிஸியோதெரபிஸ்ட்' உதவியுடன் பேட்டிங் செய்த இவர் அணியின் வெற்றிக்கு உதவினார்.
96 ரன்
அயர்லாந்து அணி (96/10) 'டி-20' உலக கோப்பையில் தனது 2வது குறைந்த ஸ்கோரை பெற்றது. இதற்கு முன், 68 ரன்னுக்கு சுருண்டது (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2010, இடம்: புரோவிடன்ஸ்).
8 விக்கெட்
'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 2வது முறையாக ஒரு போட்டியில் 8 விக்கெட் கைப்பற்றினர். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக (2022, இடம்: மெல்போர்ன்) இப்படி சாதித்தனர்.