தமிழகத்தை வீழ்த்தியது கர்நாடகா: சையது முஷ்தாக் அலி டிராபியில்
இந்துார்: சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியிடம் தோல்வியடைந்தது.இந்தியாவில், சையது முஷ்தாக் அலி டிராபி கிரிக்கெட் ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.இந்துாரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணி 20 ஓவரில், 90 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வருண் சக்ரவர்த்தி (24), கேப்டன் ஷாருக்கான் (19), முகமது அலி (15) ஆறுதல் தந்தனர். கர்நாடகா சார்பில் வாசுகி கவுசிக், மனோஜ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு மணிஷ் பாண்டே (42), கேப்டன் மயங்க் அகர்வால் (30) கைகொடுக்க, 11.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். தமிழக அணி 5 போட்டியில், 2 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 6வது இடத்தில் உள்ளது.