| ADDED : மார் 15, 2024 10:21 PM
புதுடில்லி: ''உலக கோப்பை தொடருக்கான அணியில் கோலி கட்டாயம் இடம் பெற வேண்டும்,'' என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வெஸ்ட்
இண்டீஸ், அமெரிக்காவில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 1-29) நடக்க
உள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான்,
அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நியூயார்க்கில்
ஜூன் 9ல் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.இதற்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்பட மாட்டார் என செய்தி வெளியாகின. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியது:'டி-20'
உலக கோப்பை அணியில் கோலி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். இவர் சிறப்பான
'பார்மில்' உள்ளார். 2014, 2016 'டி-20' உலக கோப்பை தொடரின் நாயகன் இவர்
தான். 2022 தொடரில் இந்தியா அரையிறுதிக்கு சென்றதற்கு கோலி தான் காரணம்.
இவர் இல்லாமல் இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு கிளம்ப வாய்ப்பில்லை.ஆனால்
கோலியை சேர்க்க மாட்டர் என்ற வதந்திகளை யார் பரப்புகின்றனர் என்றே
தெரியவில்லை. இவர்களுக்கு வேறு வேலை இல்லையா. எதன் அடிப்படையில் இப்படி
சொல்கின்றனர். எந்த உலக கோப்பை தொடராக இருந்தாலும் சரி, நிலைத்து
நின்று விளையாடுவதற்கு ஒருவர் தேவை. இந்தியா உலக கோப்பை வெல்ல வேண்டும்
எனில் கோலி 100 சதவீதம் அணிக்கு தேவை. 2011ல் சச்சினுக்கு
கொடுக்கப்பட்டதைப் போல, கோலிக்கு கவுரவம் தரப்பட வேண்டும் என நம்புகிறேன்.
இவருக்காக இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.