| ADDED : மார் 18, 2024 10:58 PM
சென்னை: ஐ.பி.எல்., துவக்க போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் தவிக்கிறார் அஷ்வின்.ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ல் நடக்க உள்ளது. இதில் 'தல' தோனியின் சென்னை அணி, 'கிங்' கோலி இடம் பெற்றுள்ள பெங்களூருவை எதிர்கொள்கிறது. இரு நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 'ஆன்லைனில்' துவங்கியது. ரூ. 1700 - 7500 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் டிக்கெட் விற்று தீர்ந்ததால், இந்திய அணி 'சுழல்' நாயகன் அஷ்வின், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஐ.பி.எல்., தொடரின் துவக்க காலத்தில் தமிழகத்தின் அஷ்வின், சென்னை அணிக்காக 7 ஆண்டுகள்(2008-2015) விளையாடி 70 விக்கெட் வீழ்த்தினார். தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். இம்முறை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் கிடைக்க உதவும்படி பழைய பாசத்தில் சென்னை அணி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.இது குறித்து சமூகவலைதளத்தில் அஷ்வின் வெளியிட்ட செய்தியில்,'சென்னை-பெங்களூரு மோதும் போட்டிக்கான டிக்கெட்டுக்கு நம்ப முடியாத அளவுக்கு 'டிமாண்ட்' காணப்படுகிறது. இப்போட்டியுடன் துவக்க விழாவையும் நேரில் காண எனது குழந்தைகள் விரும்புகின்றனர். ப்ளீஸ்...சென்னை ஐ.பி.எல்., நிர்வாகம் உதவ வேண்டும்,' என கேட்டுக் கொண்டுள்ளார்.