| ADDED : ஜூன் 15, 2024 11:59 PM
லாடர்ஹில்: இந்தியா, கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை, மைதான ஈரப்பதம் காரணமாக ரத்தானது.வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் மூன்று லீக் போட்டியில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்தி ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது. அமெரிக்காவிடம் வீழ்ந்த கனடா, அயர்லாந்தை வீழ்த்தி எழுச்சி கண்டது. பின் பாகிஸ்தானிடம் தோல்வியடைய கனடாவின் 'சூப்பர்-8' கனவு கலைந்தது. 'ஏ' பிரிவில் இந்தியா, அமெரிக்க அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா அணிகள் வெளியேறின.இந்நிலையில் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடக்க இருந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, கனடா அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை, மைதான ஈரப்பதம் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அம்பயர்கள் அடிக்கடி மைதானத்தை ஆய்வு செய்த போதும் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனையடுத்து போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்திய அணி 7 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது. கோலி ஆட்டத்தை காண விரும்பிய இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
'வாஷ் அவுட்' வாய்ப்பு
இம்முறை லாடர்ஹில், சென்ட்ரல் புரோவார்டு பார்க் மைதானத்தில் 4 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இலங்கை-நேபாளம் (ஜூன் 11), அமெரிக்கா-அயர்லாந்து (ஜூன் 14), இந்தியா-கனடா (ஜூன் 15) என மூன்று போட்டிகள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்தாகின.இங்கு பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் இன்று விளையாட உள்ளன. ஜூன் 20 வரை லாடர்ஹில் நகரில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இப்போட்டியும் ரத்து செய்யப்படலாம்.