பயிற்சியில் ரோகித் சர்மா, கோலி: ஒருநாள் தொடருக்காக
பெர்த்: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இந்தியாவின் ரோகித், கோலி ஈடுபட்டனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.இதற்காக, ரோகித் சர்மா, விராத் கோலி, கேப்டன் சுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் காம்பிர் உள்ளிட்ட இந்திய அணியினர், டில்லியில் இருந்து விமானம் மூலம் பெர்த் நகருக்கு சென்றனர்.கடின பயிற்சி: ஏற்கனவே டெஸ்ட், 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, 7 மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர். கடைசியாக, கடந்த மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். இவர்கள், வரும் 2027ல் நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் பங்கேற்க, இத்தொடரில் சாதித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் நேற்று பயிற்சியை துவக்கினர். சுமார் 30 நிமிடம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின் ரோகித், பயிற்சியாளர் காம்பிருடன் ஆலோசனை மேற்கொண்டார். பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கலுடன், கோலி ஆலோசனை செய்தார். மற்ற இந்திய வீரர்கள் இன்று முதல் பயிற்சியை துவங்க உள்ளனர்.இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' வாட்சன் கூறுகையில், ''ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவது ரோகித், கோலிக்கு சவாலாக இருக்கும். சாம்பியன்களான இவர்கள் முதல் போட்டிக்கு முன், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி விடுவார்கள்,'' என்றார்.