நாட்டுக்காக ஏழு மணி நேரம்: ஷைபாலி வர்மா நெகிழ்ச்சி
சண்டிகர்: ''பைனலில் ஏழு மணி நேரம் நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்து, உலக கோப்பை வென்றோம்,'' என ஷைபாலி வர்மா தெரிவித்தார்.நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இதில் பிரதிகா ராவல், காயம் அடைய, இளம் ஷைபாலி வர்மாவுக்கு 21, வாய்ப்பு தேடி வந்தது. பைனலில் அசத்திய ஷைபாலி, 87 ரன், 2 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார். ஆட்டநாயகி விருதையும் தட்டிச் சென்றார்.சமீபத்தில் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஷைபாலி, சொந்த ஊரான ரோஹ்தக் (ஹரியானா) திரும்பினார். இங்கு திறந்த காரில் பவனி வந்த இவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் ஷைபாலி கூறியது: பெண்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு போராடினால், எதிர்பார்க்கும் பலன் தானாகவே கிடைக்கும். கடந்த ஒரு ஆண்டு எனக்கு கடினமாக இருந்தது. நிறைய சிரமங்களை சந்தித்தேன். ஆனாலும் கடின உழைப்பை விடவில்லை. எனது முயற்சிக்கு கடவுள் உரிய பலன் அளித்தார். அரையிறுதிக்கு முன் தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அணிக்கு உலக கோப்பை வென்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கோப்பை முக்கியம்: பைனலின் போது ஆரம்பத்தில் பதட்டமாக உணர்ந்தேன். பின் மனதை அமைதிப்படுத்தி ஆட்ட வியூகத்தில் கவனம் செலுத்தினேன். எனது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், 'ஆல்-ரவுண்டராக' பிரகாசிக்க முடிந்தது. போட்டி நடந்த ஏழு மணி நேரம் நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே சிந்தனையாக இருந்தது. சதத்தை நழுவவிட்டதில் எனக்கு வருத்தம் இல்லை. கோப்பை வெல்வதே முக்கியமானதாக இருந்தது. 'உலகை' வென்ற தருணம் மறக்க முடியாதது. கிரிக்கெட்டில் எனது 'ரோல் மாடல்' சச்சின் தான். பிரதமர் மோடி எங்களுடன் இரண்டு மணி நேரம் செலவிட்டு, தேவையான ஊக்கம் அளித்தார். இவ்வாறு ஷைபாலி கூறினார்.