| ADDED : பிப் 23, 2024 10:47 PM
புதுடில்லி: பி.சி.சி.ஐ., உத்தரவை மதிக்காத ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். 'டி-20' உலக கோப்பை அணியிலும் சேர்க்கப்பட மாட்டர்.இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 25. இந்திய அணியில் இடம் பெற்ற போதும், களமிறங்கும் லெவன் அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியில், தானாக ஓய்வு கேட்டு விலகினார். தற்போது ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். ஆனால், இஷான் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'அட்வைஸ்' செய்தது. இதை ஏற்காத இஷான், தனது ஜார்க்கண்ட் மாநில அணி நிர்வாகத்தை கூட தொடர்பு கொள்ளவில்லை. இதேபோல இந்திய அணியின் 'மிடில் ஆர்டர்' வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டுக்குப் பின் மோசமான 'பார்ம்' காரணமாக நீக்கப்பட்டார். ஆனால் முதுகு வலி இருப்பதாக தெரிவித்து, ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்தார். இந்த இருவரது செயல், பி.சி.சி.ஐ.,க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.சி.சி.ஐ., சம்பள பட்டியலில் ஸ்ரேயாஸ் 'பி' கிரேடு (ரூ. 3 கோடி), இஷான் 'சி' கிரேடில் (ரூ. 1 கோடி) இடம் பெற்றுள்ளனர். விரைவில் வெளியாகும் புதிய பட்டியலில், இருவரையும் நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தவிர, வரும் ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள 'டி-20' தொடருக்கான உலக கோப்பை அணியிலும் இவர்கள் சேர்க்கப்பட வாய்ப்பில்லாமல் போகலாம்.