தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி
செஞ்சுரியன்: ரீசா ஹென்டிரிக்ஸ் சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி செஞ்சுரியனில் நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (98), பாபர் ஆசம் (31), இர்பான் கான் (30) கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஹென்டிரிக்ஸ் (117 ரன், 63 பந்து, 10 சிக்சர், 7 பவுண்டரி) சதம் கடந்து கைகொடுத்தார். அரைசதம் விளாசிய வான் டெர் துசென், அபாஸ் அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.தென் ஆப்ரிக்க அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன் எடுத்து வெற்றி பெற்றது. துசென் (66 ரன், 38 பந்து, 5 சிக்சர்), கேப்டன் கிளாசன் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஹென்டிரிக்ஸ் வென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்
சர்வதேச 'டி-20' அரங்கில் 2 ஆண்டுகளுக்கு பின் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா. கடைசியாக 2022ல் இங்கிலாந்து (2-1), அயர்லாந்துக்கு (2-0) எதிராக 'டி-20' தொடரை வென்றது. அதன்பின் 6 தொடரை இழந்த தென் ஆப்ரிக்கா, 2 தொடரை சமன் செய்தது.