தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: வங்கதேச அணி ஏமாற்றம்
மிர்பூர்: முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மிர்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106, தென் ஆப்ரிக்கா 308 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 283/7 ரன் எடுத்திருந்தது.நான்காம் நாள் ஆட்டத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 307 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 6 விக்கெட் சாய்த்தார்.பின், 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (41), கேப்டன் மார்க்ரம் (20) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (30) அவுட்டாகாமல் இருந்தார்.தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் அக். 29ல் சாட்டோகிராமில் துவங்குகிறது.
10 ஆண்டுகளுக்கு பின்...
வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி, ஆசிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2014ல் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 153 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.* வங்கதேச மண்ணில் 16 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2008ல் சாட்டோகிராமில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ், 205 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.நான்காவது இடம்மிர்பூர் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. முதல் மூன்று இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் நீடிக்கின்றன.