தெற்கு மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி அரையிறுதியில்
பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் தெற்கு மண்டல அணி 536 ரன் குவித்தது.பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதியில் தெற்கு, வடக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 297/3 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் (148) அவுட்டாகாமல் இருந்தார்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய தெற்கு மண்டல அணியின் நாராயணன் ஜெகதீசன் (197) இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ரிக்கி புய் (54), தனய் தியாகராஜன் (58) கைகொடுக்க, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வடக்கு மண்டலம் சார்பில் நிஷாந்த் சிந்து 5 விக்கெட் சாய்த்தார்.ஷர்துல் அரைசதம்: மற்றொரு அரையிறுதியில் மேற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 363/6 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஷர்துல் தாகூர் (64) அரைசதம் விளாச, மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 438 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பின் முதல் இன்னிங்சை துவக்கிய மத்திய மண்டல அணிக்கு டேனிஷ் மலேவர் (76), சுபம் சர்மா (60*), கேப்டன் ரஜத் படிதர் (47*) கைகொடுக்க, ஆட்டநேர முடிவில் 229/2 ரன் எடுத்து, 209 ரன் பின்தங்கி இருந்தது.