42 ரன்னுக்கு சுருண்டது இலங்கை: டர்பன் டெஸ்டில் பரிதாபம்
டர்பன்: டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஏமாற்றிய இலங்கை அணி 42 ரன்னுக்கு சுருண்டது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 80/4 ரன் எடுத்திருந்தது. பவுமா (28), வெர்ரின்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் பவுமா (70), கேஷவ் மஹாராஜ் (24) கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வியான் முல்டர் (9) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லகிரு குமாரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் முதல் இன்னிசை துவக்கிய இலங்கை அணி 13.5 ஓவரில் 42 ரன்னுக்கு சுருண்டது. கமிந்து மெண்டிஸ் (13), லகிரு குமாரா (10*) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய மார்னோ யான்சென் 7 விக்கெட் சாய்த்தார்.ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு132 ரன் எடுத்து, 281 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மார்க்ரம் (47) நம்பிக்கை தந்தார். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் பவுமா (24), ஸ்டப்ஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
மோசமான ஸ்கோர்
டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி, தனது மோசமான ஸ்கோரை (42) பெற்றது. இதற்கு முன், 1994ல் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டி டெஸ்டில் 71 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.* டெஸ்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியானது இலங்கை. இதற்கு முன் 2013ல் நடந்த கேப்டவுன் டெஸ்டில் நியூசிலாந்து அணி 45 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.83 பந்துடர்பனில் 83 பந்தில் (13.5 ஓவர்) 'ஆல்-அவுட்' ஆன இலங்கை, கடந்த 100 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்தில் சுருண்ட 2வது அணியானது. ஏற்கனவே 1924ல் நடந்த பர்மிங்காம் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி 75 பந்தில் (12.3 ஓவர், எதிர்: இங்கிலாந்து) 30 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.