| ADDED : ஆக 15, 2024 10:41 PM
புதுடில்லி: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ., மறுப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வங்கதேசத்தில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் வரும் அக்., 3-20ல் நடக்கவுள்ளது. 10 அணிகள், 18 நாள், 23 போட்டிகள் போட்டிகள், தாகா, ஷில்ஹெட் என இரு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஆனால், கலவரம் காரணமாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருந்து உலக கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா கூறியது:பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐ.சி.சி., கேட்டது. இதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். ஏனெனில் அக்டோபர் மாதம் இந்தியாவில் மழைக்காலம். தவிர அடுத்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை (ஒருநாள்) தொடர் நடக்க உள்ளது. இதனால் அடுத்தடுத்து உலக கோப்பை தொடரை நடத்தும் நிலை ஏற்படும் என்பதால், மறுப்பு தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார். இதனால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடத்தப்படலாம். இதுகுறித்து ஆக. 20ல் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.