சேப்பாக்கம் ஆறாவது வெற்றி
நெல்லை: டி.என்.பி.எல்., தொடரில் சேப்பாக்கம் அணி 6வது வெற்றி பெற்றது. நேற்று 4 ரன்னில் திருச்சியை வென்றது. நெல்லையில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட சேப்பாக்கம் அணி, திருச்சி அணியை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (5), மோகித் ஹரிஹரன் ஜோடி துவக்கம் கொடுத்தது. மோகித் 16 பந்தில் 25 ரன் எடுத்து அவுட்டானார். கேப்டன் பாபா அபராஜித், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தனர். பாபா அபராஜித் சிக்சர்களாக விளாசினார். ஈஸ்வரன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்த இவர், 35 பந்தில் அரைசதம் கடந்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக அடித்த விஜய் சங்கர், 41 பந்தில் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது பாபா அபராஜித் (63 ரன், 40 பந்து) அவுட்டானார். விஜய் சங்கர் 59 ரன் எடுத்தார். அபிஷேக் (9) நிலைக்கவில்லை. சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது. திருச்சி அணிக்கு கேப்டன் சுரேஷ் குமார் (63), ஜெகதீசன் (45) கைகொடுத்தனர். கடைசி 6 பந்தில் 12 ரன் தேவைப்பட்டன. ஆனால் 7 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. திருச்சி அணி 20 ஓவரில் 174/6 ரன் எடுத்து தோல்வியடைந்தது.