ராகுல் கூட்டணி கணக்கு என்ன: ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு
ராஞ்சி: ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை கண்டறிய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் கேப்டன் ராகுல்.சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அடுத்து, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி நாளை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது. எஞ்சிய போட்டிகள் ராய்பூர் (டிச. 3), விசாகப்பட்டனத்தில் (டிச. 6) நடக்கவுள்ளன. இரு விக்கெட்கீப்பர்: இத்தொடருக்கான கேப்டனாக கே.எல். ராகுல் களமிறங்க உள்ளார். இவரே விக்கெட்கீப்பர் பணியை ஏற்கும்பட்சத்தில் ரிஷாப் பன்ட் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். டெஸ்ட் தொடரில் பன்ட் சோபிக்கவில்லை. ரோகித், கோலி போன்ற சீனியர் வீரர்கள் வரவால், வலது கை பேட்டர்கள் அதிகம் உள்ளனர். இந்தச் சூழலில் இடது கை பேட்டரான ரிஷாப் பன்ட் கைகொடுக்கலாம். கீப்பராக அல்லாமல் 'மிடில் ஆர்டர் பேட்டராக' மட்டும் சேர்த்தால், கூடுதலாக ஒரு 'ஆல்-ரவுண்டர்' இடம்பெற முடியாது. வாஷிங்டன் வாய்ப்பு: பொதுவாக ராஞ்சி ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும். தற்போதைய பனி காலத்தில் லேசாக புற்கள் இருந்தால், வேகப்பந்துவீச்சு எடுபடும். இதனால், வாஷிங்டன் சுந்தரா அல்லது நிதிஷ் குமாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 7வது இடத்தில் 'பேட்டிங்' செய்வது, 'பவர்-பிளே' ஓவரில் கட்டுக்கோப்பாக பந்துவீசுவது வாஷிங்டன் பலம். கடைசி கட்டத்தில் அதிரடியாக ரன் சேர்ப்பது, வேகத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், நிதிஷ் பக்கம் அதிர்ஷ்டம் அடிக்கலாம். வாஷிங்டன் இடம் பெறாத பட்சத்தில், குல்தீப் அல்லது பிஷ்னோய் வாய்ப்பு பெறுவர். முந்தும் ஹர்ஷித்: சிராஜ், பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டதால், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா என மூன்று 'வேகங்கள்' போட்டியிடுகின்றனர். தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ரம், பிரீட்ஸ்கி போன்ற விளாசல் வீரர்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த பந்துகளை 'ஸ்விங்' செய்யும் அர்ஷ்தீப் சிங், அசுர வேகத்தில் பந்துவீசும் ஹர்ஷித் வாய்ப்பு பெறலாம்.ரோகித், ஜெய்ஸ்வால், கோலி, ஜடேஜா என பேட்டிங்கில் பஞ்சம் இல்லை. திலக் வர்மாவை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் 3, 5, 6 என எந்த இடத்திலும் விளையாடும் திறன் பெற்றவர். தரமான 'லெவனை' ராகுல்-காம்பிர் தேர்வு செய்தால், இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கலாம். தோனி வீட்டில் விருந்துமுதல் ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியினர் ராஞ்சி வந்துள்ளனர். இது, முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊர். இங்குள்ள தனது பண்ணை வீட்டில் கோலி, ருதுராஜ், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு தோனி விருந்து கொடுத்தார். 'டின்னருக்கு' பின் தோனி காரை ஓட்ட, அருகில் கோலி அமர்ந்து சென்றார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது.