உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எங்கே செல்லும் சுப்மன் கில் பாதை: உலக டி-20 அணியில் நீக்கம் ஏன்

எங்கே செல்லும் சுப்மன் கில் பாதை: உலக டி-20 அணியில் நீக்கம் ஏன்

மும்பை: சுப்மன் கில் கிரிக்கெட் வாழ்வில் திடீரென புயல் வீசுகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டியின் கேப்டனாக உச்சம் தொட்ட இவர், 'டி-20' உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் (2026, பிப். 7-மார்ச் 8) நடக்கவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, முதல் போட்டியில் அமெரிக்காவை (பிப். 7) எதிர்கொள்கிறது. டெஸ்டில் அசத்தல்: இதற்கான இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் 35, நீடிக்கிறார். துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் 26, நீக்கப்பட்டார். சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் இவர் (4,0,28) சோபிக்கவில்லை. 2025ல் 15 'டி-20' போட்டியில் 291 ரன் (சராசரி 24.25, ஸ்டிரைக் ரேட் 137.26) தான் எடுத்தார். அதே நேரம், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், 5 போட்டியில் 754 ரன் குவித்தார். கேப்டனாகவும் அசத்திய இவர், தொடர் 2-2 என 'டிரா' ஆக காரணமாக இருந்தார். இதையடுத்து மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் சுப்மனை கேப்டனாக நியமிக்க பயிற்சியாளர் காம்பிர் விரும்பினார். ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மந்தமான துவக்கம்: தொடர்ந்து ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் சுப்மனை சேர்த்தனர். துவக்க வீரராக, 3 சதம் அடித்து நல்ல 'பார்மில்' இருந்து சாம்சனை வீணாக பின்வரிசைக்கு அனுப்பினர். அபிஷேக் சர்மா உடன் துவக்கத்தில் சுப்மன் வந்தார். ஒருபக்கம் அபிஷேக் 'நெருப்பாக' விளையாட, மறுபக்கம் சுப்மன் 'பனி' போல அடக்கி வாசித்தார். இதனால் 'பவர் பிளே'யில் (முதல் 6 ஓவர்) அதிக ரன் கிடைக்கவில்லை. பின்வரிசையில் சாம்சனும் பிரகாசிக்க தவற, ஹர்திக் பாண்ட்யாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. வாய்ப்பு கடினம்: 'நெருப்பும் பனியும்' ஒன்று சேர முடியாத என்பதை உணர்ந்த தேர்வுக்குழு தலைவர் அகார்கர், கேப்டன் சூர்யகுமார் சுதாரித்தனர். 'டி-20' உலக கோப்பைக்கான அணியில் சுப்மனுக்கு வாய்ப்பு மறுத்தனர். இதே இந்திய அணி தான் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரிலும் (ஜன. 21-31) விளையாட உள்ளது. துவக்கத்தில் அபிஷேக்-சாம்சன் மீண்டும் களமிறங்குவர். மற்றொரு அதிரடி 'கீப்பர்-பேட்டர்' இஷான் கிஷானும் அணியில் இருப்பதால், சுப்மனின் சர்வதேச 'டி-20' எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தவறுக்கு தீர்வு: இது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,''இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் ரன் மழை பொழிய, புதிய நட்சத்திரமாக ஜொலித்தார். உடனே 'டி-20' அணியில் மீண்டும் சேர்த்தனர். இங்கு தான் இந்திய தேர்வுக்குழுவினர் தவறு செய்தனர். டெஸ்ட் செயல்பாட்டின் அடிப்படையில், 'டி-20' அணிக்கு தேர்வு செய்வது சரியல்ல. தற்போது 'டி-20' உலக கோப்பை அணியில் இருந்து சுப்மனை நீக்கி, தவறை திருத்திக் கொண்டுள்ளனர். உரிய பாடம் படித்துள்ளனர். மூன்றுவித கிரிக்கெட் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்,''என்றார்.காயம் சோகம்இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''உலகத்தரம் வாய்ந்த பேட்டர் சுப்மன் கில். சமீபத்திய தென் ஆப்ரிக்க 'டி-20' தொடரில் தடுமாறினார். ஆனாலும், கிரிக்கெட்டில் 'கிளாஸ்' என்பது நிரந்தரம்; 'பார்ம்' என்பது தற்காலிகமானது. இவரது நீக்கம் வியப்பு அளித்தது. கழுத்து, முழங்கால், கால் பாதம் என அடிக்கடி காயம் அடைந்ததும் வினையாக அமைந்தது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை