வில்லியம்சன், லதாம் அரைசதம்: நியூசிலாந்து அணி பதிலடி
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன், டாம் லதாம் அரைசதம் கடந்தனர்.இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி 302/7 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் வில்லியம் ஓ'ரூர்க் 'வேகத்தில்' ரமேஷ் மெண்டிஸ் (14), அசிதா பெர்னாண்டோ (0) வெளியேறினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ'ரூர்க் 5 விக்கெட் சாய்த்தார்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 5/0 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், கான்வே (17) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டாம் லதாம் (70), கேன் வில்லியம்சன் (55) அரைசதம் விளாசினர். ரச்சின் ரவிந்திரா 39 ரன்னில் அவுட்டானார்..ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 255 ரன் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் (41), டாம் பிளன்டெல் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட் வீழ்த்தினார்.