| ADDED : ஆக 06, 2024 10:06 PM
மும்பை: வங்கதேசத்தில் ஏற்பட்ட இக்கட்டான நிலைமை காரணமாக பெண்கள் 'டி-20' உலக கோப்பை தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வங்கதேசத்தில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் வரும் அக்., 3-20ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள், 18 நாள், 23 போட்டிகள் போட்டிகள், தாகா, ஷில்ஹெட் என இரு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள் பங்கேற்று இருந்தனர். தற்போது இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஷேக் ஹசீனா பதவி விலகி, வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது.இதனால் திட்டமிட்டபடி, வங்கதேசத்தில் உலக கோப்பை தொடர் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இந்தியா, இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,'' வங்கதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் போர்டுடன் பேசி வருகிறோம். எங்களது, அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பங்கேற்கும் அனைவரது பாதுகாப்பு தான் முக்கியம்,'' என்றார்.