இந்தியா-மங்கோலியா மோதல் * ஆசிய கோப்பை கால்பந்தில்...
வியன்டியன்: ஆசிய கோப்பை (20 வயது) தகுதி போட்டியில் இன்று இந்திய அணி, மங்கோலியாவை எதிர்கொள்கிறது. ஆசிய கால்பந்து அணிகள் (20 வயதுக்குட்பட்ட) பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் 2025ல் சீனாவில் (பிப். 6-23) நடக்கவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் சிலியில் 2025ல் நடக்கவுள்ள 'பிபா' உலக கோப்பை (20 வயது) கால்பந்து தொடரில் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்றில் ஆசியாவின் 45 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி, 'ஜி' பிரிவில் ஈரான், மங்கோலியா, லாவோசுடன் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, 2025 ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும். தவிர, 10 பிரிவில் சிறந்த 'டாப்-5' அணிக்கும், ஆசிய கோப்பை வாய்ப்பு கிடைக்கும்.இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் லாவோசில் நடக்கவுள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை எதிர்கொள்கிறது. கேப்டனாக தாமஸ் செரியன் செயல்பட உள்ளார். இந்திய அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் செப். 27ல் ஈரான், செப். 29ல் லாவோசை சந்திக்க உள்ளது.