உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / மீண்டும் சுனில் செத்ரி... * திறமையான இளம் வீரர்கள் எங்கே

மீண்டும் சுனில் செத்ரி... * திறமையான இளம் வீரர்கள் எங்கே

புதுடில்லி: இந்திய அணிக்காக மீண்டும் சுனில் செத்ரி விளையாட உள்ளார். 40 வயதான இவர், ஓய்வை திரும்ப பெற்றுள்ளார். இது, திறமையான இளம் வீரர்கள் இல்லாமல் இந்திய கால்பந்து திணறுவதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் சுனில் செத்ரி. கடந்த 2005ல் அறிமுகம் ஆன இவர், 19 ஆண்டுகால கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் (151) பங்கேற்ற, அதிக கோல் (94) அடித்த இந்திய வீரர். தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்தவர்களில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (217 போட்டி, 135 கோல்), அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு (191ல் 112) அடுத்து, மூன்றாவதாக உள்ளார். கடந்த 2024, ஜூனில் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். மாற்றம் ஏன்உள்ளூர் ஐ.எஸ்.எல்., தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். இதனால் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பும்படி இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் மனோலா மார்குயஸ் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்ற சுனில் செத்ரி, வரும் 2027 ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இறுதி தகுதிச்சுற்றில் (மார்ச் 25 முதல், வங்கதேசம்) இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்துள்ளார். வரும் மார்ச் 19ல் மாலத்தீவு அணிக்கு எதிரான நட்பு போட்டியில் களமிறங்குகிறார். காரணம் என்னஇந்திய அணி முன்னாள் வீரர் விஜயன் கூறியது:கால்பந்தில் வயது ஒரு பொருட்டல்ல. உடற்தகுதி இருந்தால் போதும். காமரூன் வீரர் ரோஜர் மில்லா, 38 வயதில் ஓய்வு பெற்றார். மீண்டும் வந்த இவர், 1990 உலக கோப்பை தொடரில் காமரூன் அணி, காலிறுதி வரை செல்ல உதவினார். தற்போது சுனில் செத்ரி, சிறப்பாக விளையாடுகிறார். இதனால் தான் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.சுனில் செத்ரி போல சிறந்த தாக்குதல் வீரர்களை கண்டறிய போராடுகிறோம். துரதிருஷ்டவசமாக இதுவரை யாரும் கிடைக்கவில்லை. ஐ.எஸ்.எல்., தொடரில் பெரும்பாலான தாக்குதல் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். பிறகு எப்படி மற்றொரு சுனில் செத்ரியை கண்டறிய முடியும்,'' என்றார். இம்முறை சுனில் செத்ரி வருகை இந்திய அணியை ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறச்செய்யலாம். அடுத்த சீசனுக்கு என்ன செய்வார்கள் என தெரியவில்லை. நீண்ட கால தீர்வாக, இளம் வீரர்களை கண்டறிய இந்திய கால்பந்து கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும். 12 கோல்ஐ.எஸ்.எல்., தொடரின் நடப்பு சீசனில் சுனில் செத்ரி, 23 போட்டியில் 12 கோல் அடித்துள்ளார். அதிக கோல் அடித்த இந்திய வீரர்களில் முதல்வனாக உள்ளார். தவிர சக வீரர்கள் 2 முறை கோல் அடிக்க உதவினார். தடுமாற்றம்கேப்டன் சுனில் செத்ரி ஓய்வுக்குப் பின் இந்திய அணி, கோல் அடிக்கவே தடுமாறுகிறது. ஆசிய கோப்பை தகுதி உட்பட இந்தியா பங்கேற்ற 11 போட்டியில், 4 கோல் தான் அடிக்கப்பட்டன. மாலத்தீவுக்கு எதிராக 'டிரா' (0-0), சிரியாவுடன் (0-3) தோல்வி, வியட்நாம் (1-1), மலேசியாவுடன் (1-1) 'டிரா' என இந்தியா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.இப்படி இருந்தால் எப்படி...ஐ.பி.எல்., தொடர் வருகைக்குப் பின் அஷ்வின், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, நடராஜன் போன்ற பல முன்னணி வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்தனர். இதுபோல, 2013ல் ஐ.எஸ்.எல்., தொடர் துவங்கப்பட்டதும் இந்திய கால்பந்துக்கு மறுமலர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ்.எல்., தொடரில் 80 சதவீத கோல், அன்னிய அணி வீரர்களால் தான் அடிக்கப்படுகின்றன. இதனால், 2021-22 முதல் களமிறங்கும் அணியில் 5க்குப் பதில் 4 அன்னிய வீரர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என விதி மாற்றப்பட்டது. * ஆனால் இந்திய தாக்குதல் வீரர்கள் தொழில்நுட்ப ரீதியில் திறமை குறைவாக, தந்திரமாக செயல்படும் விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். சர்வதேச அரங்கில் சிறந்த வீரர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை.* சில இளம் வீரர்கள், ஜூனியர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் 'சீனியர்' அரங்கில் பிரகாசிக்க முடியவில்லை.* இந்திய வீரர்களுக்கு போட்டிகளில் அதிக நேரம் விளையாட வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஐ.எஸ்.எல்., தொடரில் தாக்குதல் வீரர்களாக விளையாட, இந்திய வீரர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு தரப்படுவதில்லை. * தாக்குதல் பிரிவுக்கு தலைமை ஏற்று, அணியை வழிநடத்துவதற்குப் பதில், பந்தை மற்றவர்களுக்கு 'பாஸ்' செய்யும் பார்வர்டு வீரர்களாவும், விங்கர்களாகவும் இந்திய வீரர்கள் மாற்றப்படுகின்றனர். * ஒவ்வொரு அணியிலும் களமிறங்கும் 4 தாக்குதல் வீரர்கள் பட்டியலில், பெரும்பாலும் அன்னிய வீரர்கள் தான் இடம் பெறுகின்றனர். * அதிக முதலீடு செய்யும் கால்பந்து கிளப் நிர்வாகங்கள், அணியின் வெற்றிக்கு அதிக கோல் எதிர்பார்க்கின்றன. இதற்கேற்ப, இந்திய வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்து, தங்களை நிரூபிக்கவில்லை. பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறவில்லை. * 2020-21 சீசனில் இஷான் பண்டிட்டா அறிமுக தொடரில் அசத்தினார். பின் காயத்தில் அவதிப்படுகிறார். பெங்களூரு அணிக்காக சிவசக்தி ஜொலித்தார். அவ்வளவு தான், இதன் பின் சுனில் செத்ரி தவிர, எந்த இந்திய வீரரும் அதிக கோல் பட்டியலில் இடம் பெறவில்லை. * இந்தியா போல உலகின் முன்னணி ஸ்பெயின் அணியும் தடுமாறுகிறது. உலகத் தரம் வாய்ந்த மத்திய கள வீரர்கள் இருந்த போதும், கோல் அடிக்கும் தாக்குதல் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. * சவுதி அரேபியாவில் வெளிநாட்டு வீரர்கள் வருகையால் உள்ளூர் வீரர்கள் விளையாடும் நேரம் குறைந்து விட்டது. இது தேசிய அணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஐ.எஸ்.எல்., தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. எனினும் இந்திய அணிக்கு புதிய 'சுனில் செத்ரி' ஒருவர் கூட இன்னும் கிடைக்காதது சோகம் தருகிறது.12 வீரர்கள், 67 கோல்கடந்த 2020-21 முதல் 2023-24 வரை என நான்கு ஐ.எஸ்.எல்., சீசனில் 69 அன்னிய வீரர்கள் 590 கோல் அடித்தனர். ஆனால் இந்தியாவின் 12 வீரர்கள் இணைந்து 67 கோல் தான் அடித்தனர். தீர்வு என்னநடப்பு ஐ.எஸ்.எல்., தொடரில் தாக்குதல் வீரர் பிரிசன் பெர்ணான்டஸ் (7 கோல்), 'மிட் பீல்டராக' அசத்துகிறார். சுபாஷிஷ் போஸ் (6), தற்காப்பு வீரராக உள்ளார். இந்தியாவின் முன்னணி தாக்குதல் வீரர்கள் சாங்டே, ஜெர்ரி, லிஸ்டன், மான்விர் உள்ளிட்டோர், பார்வர்டு, விங்கர்களாக உள்ளனர். இந்திய அணிக்கு ஒரு தாக்குதல் வீரர் மட்டும் தேவையல்ல. ஒரு தலைமுறை வீரர்களே உருவாக வேண்டும். மாறாக மீண்டும் செத்ரியை அழைப்பது தீர்வாகாது. ஐ.எஸ்.எல்., தொடரில் மிரட்டும் ஆக்பெச்சே, கோரோ, மிக்கு, செத்ரி என சர்வதேச வீரர்களுக்கு சமமாக போட்டியிடும் திறன் கொண்டவர்களை உருவாக்க வேண்டும். கீழ்மட்டத்தில் இருந்து கால்பந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை எனில் தாக்குதல் வீரர்கள் பற்றாக்குறை எப்போதும் தீராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை