இந்தியா 133வது இடம்: கால்பந்து தரவரிசையில்
புதுடில்லி: உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 133வது இடத்துக்கு தள்ளப்பட்டது.கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி, 1113.22 புள்ளிகளுடன் 127வது இடத்தில் இருந்து 133வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் தாய்லாந்துக்கு எதிரான நட்பு போட்டியில் ஏமாற்றிய இந்தியா, ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு இந்திய அணி பங்கேற்ற 4 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா', 2 தோல்வியை பெற்றது.கடந்த 2016, டிசம்பரில் 135வது இடம் பிடித்தது இந்தியாவின் மோசமான தரவரிசையாக உள்ளது. தவிர 1996, பிப்ரவரில் 94வது இடம் பிடித்தது இந்தியாவின் சிறந்த தரவரிசையாக உள்ளது.முதல் மூன்று இடங்களில் அர்ஜென்டினா (1885.36), ஸ்பெயின் (1867.09), பிரான்ஸ் (1862.03) நீடிக்கின்றன. தலா ஒரு இடம் முன்னேறிய போர்ச்சுகல், ஜெர்மனி, குரோஷியா அணிகள் முறையே 6, 9, 10வது இடத்தை கைப்பற்றின.