உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்வே

ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்வே

மாட்ரிட்: ரியல் மாட்ரிட் கிளப் அணியில் சேர்ந்தார் எம்பாப்வே. 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே, 25. சிறந்த முன்கள வீரரான இவர், களத்தில் பம்பரமாக சுழன்று கோல் அடிப்பதில் வல்லவர். தனது 19 வயதில் உலக கோப்பை (2018) வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றார். 23 வயதில் உலக கோப்பை பைனலில் (2022) 'ஹாட்ரிக்' கோல் அடித்து சாதித்தார். இதில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோற்ற போதும் எம்பாப்வே ஆட்டம் வியக்க வைத்தது. பந்தை வேகமாக கொண்டு சென்று சிறப்பான 'பினிஷிங்' மூலம் கோல் அடித்து திறமை நிரூபித்தார். கிளப் அளவில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிக்காக 7 ஆண்டுகள் விளையாடினார் எம்பாப்வே. பி.எஸ்.ஜி., அணிக்காக அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடம் (308 போட்டி, 256 கோல்) பிடித்தார். 7 சீசனில் விளையாடி, 15 கோப்பை வென்று கொடுத்தார்.

ஜாம்பவான் வரிசையில்

தற்போது உலகின் தலைசிறந்த கிளப் அணியான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் 15வது முறையாக சாம்பயின்ஸ் லீக் கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), ஜிடேன் (பிரான்ஸ்), ரொனால்டோ (பிரேசில்), டேவிட் பெக்காம் (இங்கிலாந்து), லுாயிஸ் பிகோ (போர்ச்சுகல்), கரிம் பென்சிமா (பிரான்ஸ்) போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே விளையாடியுள்ளனர். இவர்கள் வரிசையில் எம்பாப்வேயும் சேர்ந்துள்ளார். இவர் வெளியிட்ட செய்தியில்,'எனது கனவு நனவாகியுள்ளது, ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்தது பெருமையாக உள்ளது. நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. மாட்ரிட் அணி ரசிகர்களை சந்திக்க காத்திருக்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.67 லட்சம்...

ரியல் மாட்ரிட் அணியில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எம்பாப்வேக்கு ஒரு ஆண்டுக்கு சம்பளமாக ரூ. 132 கோடி வழங்கப்படும். 5 ஆண்டுக்கு ரூ. 660 கோடி கிடைக்கும். ஒரு சீசனுக்கு 55 போட்டிகளில் விளையாடினால், ஒரு போட்டிக்கு ரூ. 2.4 கோடி பெறுவார். ஒரு போட்டியில் 90 நிமிடங்கள் விளையாடினால், ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.67 லட்சம் கிடைக்கும். தவிர போனஸ் தொகையாக ரூ. 867 கோடி வழங்கப்படும். இது ஒப்பந்த காலத்தில் பல தவணைகளாக வழங்கப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை