நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் * ஒரு செ.மீ.,ல் நழுவிய கோப்பை
பிரசல்ஸ்: டைமண்ட் லீக் பைனலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்தார். பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், டைமண்ட் லீக் தடகள பைனல் நடந்தது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உட்பட 7 பேர் களமிறங்கினர். 2021ல் டோக்கியோ (தங்கம்), சமீபத்தில் பாரிஸ் (வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இரண்டாவது இடம்முதல் இரு வாய்ப்பில் 86.82, 83.49 மீ., துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.86 மீ., துாரம் எறிந்தார். கடைசி மூன்று வாய்ப்பிலும் (82.04, 83.30, 86.46) ஏமாற்றினார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 87.87 மீ., துாரம் எறிந்து டைமண்ட் லீக் கோப்பை வென்றார். இதனால் நீரஜ் சோப்ரா (87.86 மீ.,) ஒரு செ.மீ., வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தார். கடந்த 2023 டைமண்ட் லீக் பைனலிலும் நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடம் பிடித்து இருந்தார். டுப்ளான்டிஸ் சாதனைபோல் வால்ட் போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 24, களமிறங்கினார். சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் (6.25 மீ.,) வென்றார். சமீபத்தில் போலந்து டைமண்ட் லீக்கில் 6.26 மீ., உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்தார். இம்முறை 6.11 மீ., மட்டும் தாண்டி வெற்றி பெற்றார். இது டைமண்ட் லீக் பைனல் சாதனையாக அமைந்தது. ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீரர், பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ டென்னி 69.96 மீ., துாரம் எறிந்து, 40 ஆண்டு டைமண்ட் லீக் சாதனையை முறியடித்தார். முன்னதாக 1984ல் செக்கோஸ்லோவாகியாவின் இம்ரிச் புகார், 69.94 மீ., துாரம் எறிந்து இருந்தார். ஜூலியன் அசத்தல்பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன், செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆல்பிரட் (10.88 வினாடி), டைமண்ட் லீக் பைனலில் முதன் முறையாக முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஷா காரி (11.23) 8வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் அக்கீம் பிளேக் (9.93 வினாடி) முதலிடம் பிடிக்க, அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மான் (10.00), பிரட் கெர்லே (10.01) அடுத்த இரு இடம் பெற்றனர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக், உலக சாம்பியன் பவுலினோ (49.45 வினாடி, டொமினிகன் குடியரசு) தொடர்ந்து இரண்டாவது முறையாக டைமண்ட் லீக் பட்டம் வென்றார். 'டாப்-3' வீரர்கள்வீரர்/நாடு துாரம்ஆண்டர்சன்/கிரனடா 87.87 மீ.,நீரஜ் சோப்ரா/இந்தியா 87.86 மீ.,ஜூலியன் வெபர்/ஜெர்மனி 85.97 மீ.,பறிபோன முதலிடம்கடந்த மே மாதம் தோகாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா (88.36 மீ.,), 2 செ.மீ., வித்தியாசத்தில் செக் குடியரசின் வால்டெச்சிடம் (88.38) தங்கத்தை கோட்டை விட்டார். * தற்போது ஒரு செ.மீ., வித்தியாசத்தில் நீரஜ் சோப்ரா (87.86 மீ.,), முதலிடத்தை இழந்தார்.