ஹாக்கி: இந்தியா கோல் மழை
மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி, 16-0 என சீன தைபே அணியை வீழ்த்தியது. ஓமனில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (21 வயதுக்குட்பட்ட) தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி முதல் இரு போட்டியில் தாய்லாந்து (11-0), ஜப்பானை (3-0) வென்றது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, சீன தைபேவை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி, 16-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தில்ராஜ் சிங் 4, சவுரப் ஆனந்த் 3, ரோசன் 3, அர்ஷ்தீப் சிங் 2 கோல் அடித்து உதவினர். 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 9 புள்ளியுடன் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.