இந்திய பெண்கள் கலக்கல் * ஜூனியர் உலக ஹாக்கியில்...
சாண்டியாகோ: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி, நேற்று சிலியின் சாண்டியாகோ நகரில் துவங்கியது. 24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'சி' பிரிவில் வலிமையான ஜெர்மனி, நமீபியா, அயர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது.நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து இந்திய பெண்கள் தாக்குதல் பாணியில் விளையாடினர். 10 வது நிமிடம் சாக்சி ராணா முதல் கோல் அடித்தார். தொடர்ந்து கனிகா (12, 30), பினிமா (14), சோனம் (14) அடுத்தடுத்து கோல் அடித்தனர். பின் சாக்சி (23) இரண்டாவது கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 7-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் மிரட்டிய இந்திய பெண்கள் அணி, 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெர்மனி, 7-1 என அயர்லாந்தை வீழ்த்தியது.