| ADDED : மார் 17, 2024 10:16 PM
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் நடந்த சர்வதேச தடகளத்தின் 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தேசிய சாதனை படைத்தார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இலக்கை 27 நிமிடம், 41.81 வினாடியில் அடைந்த இந்தியாவின் குல்வீர் சிங் 25, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இலக்கை அதிவேகமாக கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2008ல் சுரேந்திரா சிங் பந்தய துாரத்தை 28 நிமிடம், 02.89 வினாடியில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது. ஆசிய விளையாட்டு (2022) 10,000 மீ., ஓட்டத்தில் வெண்கலம் கைப்பற்றிய குல்வீர் சிங், 41 வினாடியில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத்தவறினார். இதற்கான தகுதி இலக்காக 27 நிமிடம், 00:00 வினாடி நியமிக்கப்பட்டுள்ளது.மற்றொரு இந்திய வீரர் கார்த்திக் குமார் (28 நிமிடம், 01.90 வினாடி) 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் அவினாஷ், இலக்கை முழுமையாக அடையவில்லை.பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்தரி (32 நிமிடம், 02.08 வினாடி) 20வது இடம் பிடித்து ஏமாற்றினார்.