வெள்ளி வென்றார் நிஷாத் குமார்: பிரீத்திக்கு 2வது வெண்கலம்
பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றார். 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி வெண்கலம் கைப்பற்றினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி47) பைனலில் அதிகபட்சம் 2.04 மீ., தாண்டிய இந்தியாவின் நிஷாத் குமார் மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை (2021, 2024) தட்டிச் சென்றார்.மற்றொரு இந்திய வீரர் ராம்பால் (1.95 மீ.,) 7வது இடம் பிடித்தார்.பிரீத்தி வெண்கலம்: பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் (டி35) பைனலில், பந்தய துாரத்தை 30.01 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரீத்தி பால் 23, வெண்கலம் வென்றார். ஏற்கனவே இவர், 100 மீ., ஓட்டத்தில் (டி35) வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் ஒரு பாராலிம்பிக் போட்டியில், இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.பைனலில் நிதேஷ்: பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல்.3) அரையிறுதியில் இந்தியாவின் நிதேஷ் குமார் 21-16, 21-12 என ஜப்பானின் டெய்சுகே புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் பிரிவு (எஸ்.எல்.4) அரையிறுதியில் இந்தியாவின் சுஹாஸ் 21-16, 21-12 என சகவீரர் சுகந்த் கடமை வீழ்த்தினார். தவிர 'எஸ்.யு.5' பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் மணிஷா, துளசிமதி முன்னேறியதால், பாட்மின்டனில் மேலும் ஒரு பதக்கம் உறுதியானது. ஒற்றையர் பிரிவு (எஸ்.எச்.6) காலிறுதியில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன் 2-0 (21-4, 21-7) என போலந்தின் ஒலிவியா ஸ்மிகிலை வீழ்த்தினார்.காலிறுதியில் பவினா: டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் (சி4) 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பவினா படேல் 3-0 (11-3, 11-6, 11-7) என மெக்சிகோவின் மார்த்தா வெர்டினை வீழ்த்தினார்.
ராகேஷ் ஏமாற்றம்
வில்வித்தை தனிநபர் காம்பவுண்டு பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார், சீனாவின் ஹி ஜிஹாவோ மோதினர். இதில் ராகேஷ் 146-147 (30-29, 29-30, 29-28, 28-30, 30-30) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெண்கலத்தை இழந்தார்.