ரசிகர்களை கவர்ந்த தாரா-ஹன்டர்: பாராலிம்பிக்கில் காதல் தம்பதி
பாரிஸ்: பாராலிம்பிக்கில் காதல் தம்பதி தாரா-ஹன்டர், ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டுதலில், 23 அடி, மூன்றரை இன்ச் துாரம் தாவிய தாரா 25, தங்கம் வென்றார். உடனே ஓடிச் சென்று, அரங்கில் இருந்த கணவர் ஹன்டரை கட்டி அணைத்து மகிழ்ந்தார்.தற்போது பாராலிம்பிக் 100, 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வெல்ல காத்திருக்கிறார் ஹன்டர் 25. பிறவி குறைபாடு காரணமாக, 11 மாத குழந்தையாக இருந்த போது இவரது இரு கால்களும் அகற்றப்பட்டன. தடகளத்தில் ஆர்வமாக இருந்த இவர், 'கார்பன் பைபர் பிளேடு' வகை செயற்கை கால் பொருத்தி ஓடத் துவங்கினார். 2016ல் ரியோ பாராலிம்பிக், 400 மீ., (வெண்கலம்), 200 மீ., (வெள்ளி) ஓட்டத்தில் பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 'காதல் நகரான' பாரிஸ் மண்ணில், மனைவி தாராவை போல தங்கம் வெல்லும் இலக்குடன் உள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த தாரா-ஹன்டர் காதல் கதை சுவாரஸ்யமானது. 2017ல், 17வது வயதில் உள்ளூர் போட்டியில், கண்டதும் காதல் மலர்ந்தது.மகத்தான தங்கம்தாரா கூறுகையில்,''ஹன்டரை முதலில் பார்த்த போது கட்டி அணைத்து பாராட்டினேன். ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை. பாரிஸ் ஒலிம்பிக்கில் இடது குதிகால் காயத்துடன் பங்கேற்றேன். ஒவ்வொரு முறை தாவும் போதும் வலியை உணர்ந்தேன். 'வலி தற்காலிகமானது; ஒலிம்பிக் தங்கமே மகத்தானது' என மனதில் சொல்லிக் கொண்டே இருந்தேன். இறுதியில் தங்கம் வென்றேன்,''என்றார். கடின பயிற்சிஹன்டர் கூறுகையில்,''தாராவை முதலில் பார்த்த உடனேயே 'இவர் தான் என் மனைவி' என மனம் சொன்னது. தடகளத்தில் உச்சம் தொடுவதே எங்களது கனவாக இருந்தது. எனது உடலில் பாதிப்பு இருக்கிறது. எங்களால் சேர்ந்து வாழ முடியாது என விமர்சித்தனர். ஆனால், ஒன்றாக பயிற்சி செய்கிறோம். போட்டிகளுக்கு ஒன்றாக செல்கிறோம். 2022, அக். 16ல் திருமணம் செய்து கொண்டோம். தாராவுடன் செலவிடும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியானது. ஒலிம்பிக் வீரர்களை போல பாராலிம்பிக் நட்சத்திரங்களும் கடினமாக பயற்சி செய்கின்றனர். தடகளத்தில் தடம் பதிக்க, வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர்,''என்றார்.