மேலும் செய்திகள்
ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி
10-Aug-2025
கோல்கட்டா: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் வெஸ் பயஸ் 80, காலமானார். இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தந்தை வெஸ் பயஸ். 1945ல் கோவாவில் பிறந்தார். இளம் வயதில் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி போட்டியில் விளையாடினார். பின் ஹாக்கியின் மீது கவனம் செலுத்திய இவர், உலக கோப்பை (1971), ஒலிம்பிக்கில் (1972) வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். பின் மருத்துவம் பயின்ற வெஸ் பயஸ், அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கம், ஆசிய கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் போர்டு உள்ளிட்ட அமைப்புகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்தார். இந்திய டேவிஸ் கோப்பை அணியின் மருத்துவராக பணியாற்றினார். தவிர இவர், இந்திய ரக்பி யூனியன், கோல்கட்டா கிரிக்கெட், கால்பந்து கிளப்பின் தலைவராக இருந்துள்ளார்.நீண்ட காலமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட வெஸ் பயஸ், கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், ஹாக்கி இந்தியா தலைவருமான திலிப் டிர்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.டிர்கே கூறுகையில், ''வெஸ் பயசின் மறைவு, இந்திய ஹாக்கிக்கு சோகமான நாள். ஒரு சிறந்த சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. ஒலிம்பிக் பதக்கம் அவரது மன உறுதிக்கு சான்று. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஹாக்கி இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
10-Aug-2025