நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு போலந்தின் ஸ்வியாடெக், இத்தாலியின் சின்னர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவா மோதினர். ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-3 என ஸ்பெயினின் ஜெசிகா மனிரோவை வீழ்த்தினார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, செக்குடியரசின் கரோலினா முச்சோவா, ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவா, பிரேசிலின் பீட்ரிஸ் ஹட்டாத் மியா வெற்றி பெற்றனர்.சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர். இதில் அசத்திய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-7, 6-0, 6-0 என பிரிட்டனின் டேனியல் ஈவன்சை தோற்கடித்தார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ், அமெரிக்காவின் டாமி பால், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
காலிறுதியில் போபண்ணா ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி 0-6, 7-6, 10-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ், செக்குடியரசின் சினியகோவா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.