| ADDED : ஜூலை 29, 2024 11:41 PM
பாரிஸ்: சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து இந்தியாவின் போபண்ணா ஓய்வு பெற்றார்.பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, பிரான்சின் மோன்பைல்ஸ், ரோஜர்-வாசலின் ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா, ஸ்ரீராம் ஜோடி 5-7, 2-6 என தோல்வியடைந்து. இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக போபண்ணா 44, அறிவித்தார். கடந்த 2003ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த போபண்ணா, சமீபத்தில் டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையர் (2024), கலப்பு இரட்டையரில் (2017) தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றார். ஆசிய விளையாட்டில் இரண்டு முறை (2018-இரட்டையர், 2022-கலப்பு இரட்டையர்) தங்கம் கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக் (2016) கலப்பு இரட்டையரில் போபண்ணா-சானியா ஜோடி 4வது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. போபண்ணாவுக்கு நாட்டின் உயரிய அர்ஜுனா (2019), பத்ம ஸ்ரீ (2024) விருது வழங்கப்பட்டது.போபண்ணா கூறுகையில், ''இது எனது கடைசி சர்வதேச போட்டி. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.