வேதகிரீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பால் 10 ஏக்கர் மாயம்
திருக்கழுக்குன்றம் : ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. இங்கு நான்கு வேதங்களே, மலைக்குன்றுகளாக வீற்று, மலையுச்சியில் வேதகிரீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.இக்கோவில் அமைந்துள்ள மலைக்குன்றுகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற நிலம், 1984க்கு முன், யு.டி.ஆர்., எனப்படும் நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன், புல எண் 459ல், 245 ஏக்கர் பரப்பு இருந்தது.நாளடைவில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால், தற்கால வருவாய் ஆவணங்களின்படி, 235 ஏக்கர் பரப்பு தான் உள்ளது. 10 ஏக்கர் நிலம், பலரது பெயரில் பட்டா வழங்கப்பட்டு மாயமாகியுள்ளது.துறை நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலம், குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆக்கிரமிப்பிலும் உள்ளது.இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களின் நிலத்தை அளவிட்டு அடையாள கல் நட, 2022ல் உத்தரவிட்டார். மாநிலம் முழுதும், இரண்டு ஆண்டுகளாக கோவில் நிலங்களை அளவிடும் பணி நடந்து வருகிறது.இக்கோவில் நில அளவீடு, அரசியல் தலையீடுகளால் தொடர்ந்து தாமதமானது. இந்நிலையில், செயல் அலுவலர் புவியரசு மேற்பார்வையில், தற்போது அளவிடப்படுகிறது.இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறியதாவது:வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்றுகள், அதை சுற்றியுள்ள இடங்கள் என, 245 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புகளால் மாயமாகியுள்ளது. அதை கண்டறிய, நிலத்தை முழுமையாக அளவிடுகிறோம்.அதேபோல், கோவிலுக்கு சொந்தமான புல எண் 460ல், கோவில் நிலத்தை ஆக்கிரமித்தே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முதலில் இடத்தை அளவிட்டு, துறை பெயருடன் அடையாள கற்கள் நடவுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.