செங்கல்பட்டு, : காட்டாங்கொளத்துார் பகுதியில், மூன்று தனியார் ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் அய்யஞ்சேரி ஆகிய பகுதிகளில், இரண்டு நாட்களாக செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், தனியார் உணவகங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 13 தள்ளுவண்டி கடைகள், 14 தனியார் உணவகங்கள், 13 டீ, காபி கடைகள் என, மொத்தம் 41 உணவு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சட்டரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காலாவதியான 25 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு இருந்ததால், தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உரிமம் இல்லாமல் இயங்கிய மூன்று உணவு நிறுவனங்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 55ன் கீழ் அறிவிப்பு வழங்கப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டது. சுகாதாரம் இல்லாமல் இயங்கிய 10 உணவு கடைகளுக்கு, தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், இரண்டு ஹோட்டல்களுக்கு உணவு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு தரத்தின் சந்தேகத்தின் அடிப்படையில், ஐந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் உணவு தரம் அல்லது கலப்படம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும், gmail.comமற்றும் TNRS CONSUMER Mobile app 6 மூலமும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த 48 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுத்த விபரங்கள் புகார் அளித்தவர்களுக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.