அரசு மருத்துவமனையில் கூடுதல் சிசிடிவி கேமரா 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பாதுகாப்பை பலப்படுத்த, கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும் கூடுதல் மின் விளக்குகள் அனைத்து பகுதிகளிலும் அமைக்க, மருத்துவமனை நிர்வாகத்திற்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த அவசரகால தாய் - சேய் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, கண் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக, தனித்தனி பிளாக்குகள் உள்ளன. பரபரப்பு
இங்கு, 34க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில், அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த அவசரகால தாய் - சேய் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில், 205 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.இம்மருத்துவமனையில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர் மாணவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். புறநோயாளிகள் தினமும் 4,000த்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.உள்நோயாளிகள் 1,500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறிவுரை
இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார் ஆகியோர், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தனர். இதில், மருத்துவமனை பகுதியில், 20 கண்காணிப்பு கேமராக்கள் பழுது ஏற்பட்டு, செயல்படமால் இருந்தது தெரியவந்தது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். மருத்துவமனை வளாக சுற்றுச்சுவர் உடைந்த பகுதிகளை சீரமைக்கவும், நுழைவாயில் மற்றும் முக்கிய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், கூடுதலாக 25 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும். வளாகம் முழுதும் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இப்பணிகளை உடனடியாக செயல்படுத்த, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., உத்தரவிட்டார். பின், அவசர சிகிச்சை பிரிவு, நுழைவாயில், மருத்துவமனை வளாகம் முழுதும், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர் என, மருத்துவமனை நிர்வாகத்திடம், எஸ்.பி., தெரிவித்தார். மருத்துவமனை பகுதியில், சந்தேக நபர்கள் சுற்றித் திரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.