மதுக்கூடமான மேம்பாலம் கீழ் பகுதி செங்கையில் மதுபிரியர்கள் அடாவடி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில், ராட்டிணங்கிணறு பகுதியில், கடந்த 2014ல் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சாலையின் இருபுறமும், உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் விதமாக, அணுகுசாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையை செங்கல்பட்டு, அண்ணா நகர், மேலமையூர், ஆலப்பாக்கம், அமணம்பாக்கம், வல்லம் உள்ளிட்ட பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி, மாணவ -- மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் நபர்கள் நுாறுக்கும் மேற்பட்டோர், கடை திறந்ததும் மேம்பாலத்தின் அடியில் காலியாக உள்ள இடங்களில் தனித்தனி குழுக்களாக அமர்ந்து மது அருந்துகின்றனர்.இதன் காரணமாக, இந்த பகுதியில் அடிக்கடி அடிதடி சம்பவங்களும் நடைபெற்று வருவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:டாஸ்மாக் கடை திறந்தவுடன் மது வாங்கிக்கொண்டு, மது அருந்த இந்த இடத்தை தேடி வருகின்றனர். இதன் காரணமாக, இந்த பகுதி மதுக்கூடம் போல உள்ளது. 12:00 மணிக்கு வரும் நபர்கள், இரவு 9:00 மணி கடந்தும் இங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர்.இதன் காரணமாக, மாலை மற்றும் இரவு நேரத்தில் பணி முடிந்து செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.மேலும், மதுபிரியர்கள் போதையில் சாலை ஓரம் தன்னிலை மறந்து, ஆடைகள் விலகியபடி கிடக்கின்றனர். இதன் காரணமாக, பெண்கள், குழந்தைகள் சங்கடத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.இது குறித்து போலீசாரிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுபோன்று, பொது வெளியில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதி முழுதும் பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் அல்லது நெடுஞ்சாலை துறை சார்பில், சிறுவர் விளையாட்டு பூங்கா ஏற்படுத்தி, முறையாக பராமரித்தால், இந்த இடத்தை பயனுள்ள வகையில் மாற்ற முடியும். மதுபிரியர்கள் தொல்லை இல்லாமல், மாணவ- - மாணவியர் அச்சமின்றி சென்று வர முடியும்.- எஸ்.விஜய்,செங்கல்பட்டு.