பாதாள சாக்கடை அடைப்பு தெருக்களில் வழியும் கழிவுநீர்
மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி, 8வது வார்டு நின்னகரை, பாரதியார் தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை வழியாக, காந்தி நகர் பகுதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நின்னகரை ஏரியில் விடப்படுகிறது.இந்நிலையில், பாரதியார் தெருவில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக, தெருக்களில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, தெருக்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் இந்த வழியாக தினமும் பள்ளிக்கு சென்று வரும் சாலையில், கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.