மதுராந்தகம்:அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 14ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் மூன்றா-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடந்தது. ஐந்தாவது நாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு, 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். 27 அடி உயரமுள்ள சிறிய தேரில், இளங்கிளி அம்மன் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க, ஈஸ்வரன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மேற்கு மாட வீதி, யாதவர் தெரு என, நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆட்சீஸ்வர பெருமானையும், இளங்கிளி அம்மனையும் தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் விதமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.மேலும், 108 அவசர ஊர்தி, தீயணைப்பு துறை, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் செல்லும் மாடவீதி பகுதிகளில், மோர், பானகம், சுண்டல், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மின் கம்பங்களால் சிக்கல்
அச்சிறுபாக்கம் தெற்கு மாடவீதியான பஜனை கோவில் தெரு பகுதியில், புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.அவசர அவசரமாக கால்வாய் பணி நடைபெற்றதால், அப்பகுதியில் நடந்த தேரோட்டத்தின் போது தேரின் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.தேர் சக்கரம் மண்ணில் சிக்கிக்கொண்ட பகுதியில், மின்மாற்றி மற்றும் மினி குடிநீர் தொட்டியை, சாலையை ஆக்கிரமித்து பேருராட்சி நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.பின், கோவில் நிர்வாகத்தின் வாயிலாக பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக தேர் மீண்டும் மாடவீதிக்கு கொண்டுவரப்பட்டது.தேர் செல்லும் முக்கிய வீதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாலையின் ஓரத்திலேயே உள்ளதால், ஆண்டுதோறும் சிறிய அளவிலான நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.எனவே, தேர் செல்லும் முக்கிய வீதிகளில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, மண்ணில் மின் புதைவழித்தடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.