| ADDED : ஜூலை 24, 2024 12:53 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதி சாலை விரிவாக்கத்திற்காக, இ.சி.ஆர்., புறவழிப் பாதையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், அரசு மருத்துவமனை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில், சந்திப்பிற்கு மேற்கில் உள்ள அபாய வளைவுகள் கொண்ட பழைய புதுச்சேரி சாலையை தவிர்த்து, புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, சந்திப்பிற்கு கிழக்கில், சாலையை அகலப்படுத்தி, புதிய சாலையுடன் இணைப்பது, இச்சாலை மட்ட உயரத்திற்கேற்ப, மாமல்லபுரம் உட்புற சாலை மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. மேலும், மின் இணைப்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன.இதையடுத்து, மாமல்லபுரம் புறவழி சந்திப்பிலிருந்து, அரசு மருத்துவமனை சந்திப்பு வரை, புதுச்சேரி தடத்தில் மட்டும், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில், சென்னை, புதுச்சேரி ஆகிய தடங்களில் செல்லும் வாகனங்கள், சென்னை தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், அதற்கேற்ப தடுப்புகள் வைத்து, ஒரே தடத்தில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.