காப்புக்காட்டில் குப்பை குவிப்பு தீ வைத்து எரிப்பதாலும் அவதி
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆப்பூர் கிராமத்தைச் சுற்றி 767 பரப்பளவில், காப்புக்காடுகள் உள்ளன.மேலும், இந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.இங்கு மலைக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் பல மாதங்களாக, வெளியூரைச் சேர்ந்த நபர்கள் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பையை, வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைக்கு தீ வைப்பதால், பனிப்பொழிவுடன் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகை செல்கிறது. அத்துடன், தீ காப்பு காடுகளில் பரவி, அங்குள்ள மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, காப்புக்காடு பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.