கால்நடைகளுக்கு அம்மை நோய் கட்டுப்படுத்தப்படும்: கலெக்டர்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, வேளாண்மை இணை இயக்குனர் அசோக், சப்- - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். தடுப்பூசிகூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;திருப்போரூர் பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு மாடுகள் இறந்துஉள்ளன. கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவுவதை தடுக்க, தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தாமூர் வேளாண்மை அலுவலகத்தில், பொன்னி விதை நெல் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். தற்போது, தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம், நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மதுராந்தகம் பகுதி யில் பெல்ட் அறுவடை இயந்திரம் ஒன்று மட்டுமே உள்ளது. மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய தாலுகாவில், விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. இதனால், அறுவடை இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடைக்கு இயந்திரங்கள், பெல்ட் இயந்திரங்கள் தனியாக இருக்க வேண்டும். பாலாற்றில் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயம் செழிக்கும்.பாலுார் ஏரிக்கு, பாலாற்றில் இருந்து வரும் வரத்து கால்வாயை சீரமைத்து, தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி மதகுகள் உடைந்துள்ளன. அதை, மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட அரசு சலுகைகள் பெற, சிறு, குறு, விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஒரத்துார் கிராமத்தில், 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம். நடவடிக்கை
விவசாய நிலத்திற்கு செல்லும் சாலை, வனத்துறை வழியாக செல்கிறது. சாலை சீரமைக்க வேண்டும். பெருக்கரணை -- சித்தாமூர் சாலை, ஓராண்டாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், விவசாயிகள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இதனால், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில், விவசாயம் அதிக மாக நடைபெறும் பகுதியில், உலர்களம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:திருப்போரூர் பகுதியில், கால்நடைகளுக்கு அம்மைநோய் கட்டுப்படுத்த சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசிகள் செலுத்த, கால்நடைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலர்களங்கள் அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை இயந்திரங்கள் கூடுதலாக வாங்க, வேளாண்மை பொறியியல் துறையினருக்கு, அரசுக்கு கருத்துருவை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.