உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திறந்தவெளியில் கழிவுநீர் விடும் லாரிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

திறந்தவெளியில் கழிவுநீர் விடும் லாரிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 450க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளிட்டவை உள்ளன.இங்குள்ள, 6 வார்டுகளில் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.மற்ற வார்டுகளில், பாதாள சாக்கடை அமைக்க, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.பாதாள சாக்கடை இல்லாத காரணத்தால் தொழிற்சாலைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர், தனியார் 'டேங்கர்' லாரிகள் வாயிலாக வனப்பகுதிகள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், சாலையோரங்களில் வெளியேற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது.குறிப்பாக, மறைமலைநகர் சிப்காட் பகுதியை ஒட்டியுள்ள காலி இடங்கள், ஸ்ரீவாரி நகரிலுள்ள காலி இடங்களில் வெளியேற்றப்படுகிறது.மேலும், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே, காட்டாங்கொளத்துார் ஏரிக்கு மழை நீர் செல்லும் கால்வாயிலும், கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அத்துடன், கழிவுநீருடன் ரசாயன நீரும் கலந்து, தொடர்ந்து இதுபோன்ற இடங்களில் வெளியேற்றப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீர், ஏரி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:புறநகர் பகுதிகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதில், பெரும் தொய்வு மற்றும் நடைமுறை சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, திறந்தவெளி இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும், கழிவுநீர் லாரிகளின் உரிமையாளர்கள், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பின்புலம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.மேலும், ஜி.எஸ்.டி., சாலை அருகில் கழிவுநீர் கொட்டப்படும் இடத்தில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் தான், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது.ஆனால் அவர்கள், விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பது இல்லை. இந்த கழிவுநீர் கொட்டும் காட்டாங்கொளத்துார் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, நகராட்சியில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், பகுதிவாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கழிவுநீர் அகற்றும் தனியார் டேங்கர் லாரிகளுக்கு, நகராட்சி சார்பில் தனியாக உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. திறந்த வெளியில் கழிவுநீர் வெளியேற்றுவோருக்கு, முதல் முறை 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இரண்டாம் முறை 50 ஆயிரம் ரூபாயும் அடுத்தடுத்து பிடிபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இருப்பினும் செங்கல்பட்டு வரை சென்று வரும் டீசல் செலவு, சுங்கச்சாவடி கட்டணம் போன்றவற்றை தவிர்க்க, இதுபோன்று திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.மறைமலைநகர் நகராட்சியில் எடுக்கப்படும் கழிவுநீரை, செங்கல்பட்டு பழவேலி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் விட ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.மறைமலைநகர் அடிகளார் சாலையில், புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை