கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி:தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணியரின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.இங்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிக அளவிலான பயணியர் வந்து செல்கின்றனர்.சென்னை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் இருந்து வரும் பயணியர், கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகர பேருந்துகளுக்கென அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் இறங்குகின்றனர்.மாநகர பேருந்து நிலையத்தில், சிறிய கடைகள் ஏதும் இல்லாததால், வயதானோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் சிறு சிறு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குக்கூட சிரமம் அடைகின்றனர்.எனவே, பயணியர் நலன் கருதி, பேருந்து நிலைய வளாகத்தில் டீ கடை, சிறிய ஹோட்டல்கள் ஊள்ளிட்ட சிறு கடைகள் வைத்துக்கொள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு அனுமதி வழங்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து, ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது:கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில், சிறிய அளவிலான கடைகள் வைத்துக்கொள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.தற்போது, வளாகத்தில் பெட்டிக்கடைகள் இல்லாமல், பயணியர் சிரமம் அடைகின்றனர். எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் பெட்டிக்கடைகள் வைத்துக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.